Monday, May 10, 2021

விப்ரோ - ஒரு பண இயந்திரம் :

ஒருவர் 1946ல் Wipro நிறுவனத்தின்  முகமதிப்பு ரூபாய் 100 உள்ள மூன்று பங்குகளை அதன் முதல் பங்கு வெளியீட்டில்  (ipo) வாங்கி நாளது தேதி வரை வைத்திருப்பதாக ஒரு கற்பனை. 1946ல் 300 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை முதலான நம்பிக்கையின்மைகளை ஆரோக்கியமாகப் புறந்தள்ளி விட்டு (a willing suspension of disbelief) நிறுவனத்தின் இலவசப்பங்கு, பங்குப்பிரிப்பு மற்றும் நிறுவனப்பிரிப்பு  வரலாற்றைக் கொஞ்சம்  விரிவாகப் பார்க்கலாம்.

1946 - IPO - 3 பங்குகள்

1971 - 1:3 இலவசப்பங்கு - 4

1981 - 1:1 இலவசப்பங்கு - 8

1985 - 1:1 இலவசப்பங்கு - 16

1987 - 1:1 இலவசப்பங்கு - 32

1989 - 1:1 இலவசப்பங்கு - 64

1990 - 10:1 பங்குப் பிரிப்பு - 640 

1992 - 1:1 இலவசப்பங்கு - 1280

1995 - 1:1 இலவசப்பங்கு - 2560

1997 - 2:1 இலவசப்பங்கு - 7680

1999 - 5:1 பங்குப் பிரிப்பு - 38400

2004 - 2:1 இலவசப்பங்கு - 115200

2005 - 1:1 இலவசப்பங்கு - 230400

2010 - 2:3 இலவசப்பங்கு - 384000

2012 - நிறுவனப்பிரிப்பு - 12.12:100 - 430545

2017 - 1:1 இலவசப்பங்கு - 861090

2019 - 1:3 இலவசப்பங்கு - 1148120


1946ல் ஒருவர் 3 Wipro பங்குகளை வாங்கி நாளது தேதி வரை கையில் வைத்திருந்தால் (இது தான் ரொம்பவும் கஷ்டமானது) அந்த 3 பங்குகள் 1148120 பங்குகளாகப் பல்கிப் பெருகியிருக்கும். அதன் இன்றைய (03.5.2019) மதிப்பு கிட்டத்தட்ட 33 கோடி. 2018 ஆம் வருடத்திற்கான பங்காதாயம் ஒரு பங்குக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் கிட்டத்தட்ட 11 இலட்சம்.

விப்ரோ நிறுவனம் 1946ல் மும்பையிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள jalgaon மாவட்டத்தின் amalner என்ற ஊரில் வனஸ்பதி, சோப்பு முதலான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக அசீம் பிரேம்ஜியின் தந்தை முகம்மது பிரேம்ஜியால் தொடங்கப்பட்டது. அப்போதைய அதன் பெயர் Western India vegetable products company. 1966ல் முகம்மது பிரேம்ஜியின் மறைவிற்குப் பின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அசீம் பிரேம்ஜி அதன் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் தான் நிறுவனம் கணினித் துறையில் கால் பதிக்கிறது. நுகர்பொருள் துறையும் தனிப்பட்ட முறையில் வளர்கிறது.

நீண்ட கால அடிப்படையில் 3 பங்குகள் 1148120 பங்குகளாக பல்கிப் பெருகிய விதத்தைக் கவனியுங்கள். ஆரம்ப முதலீடான 300 ரூபாய்க்கு 366666% ( பதிவுப்பிழை இல்லை) பங்கு ஈட்டு விகிதம். இந்தக் கூடுதலான பங்கு ஈட்டு விகிதத்தைக் கொடுக்கக்கூடிய பங்கின் விலையும் 33 கோடிகளாகக் கூடியிருக்கிறது. 1946ல் 300 ரூபாய் என்பது ஆகப்பெரிய தொகை, அவ்வளவு ரூபாய் முதலீடு செய்வது சிறுமுதலீட்டாளர்களுக்குச் சாத்தியமில்லாதது என்பவர்களுக்காக ஒரு சிறிய கணக்கு. 1946ல் ஒரு ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போதைய அதன் மதிப்பு 11 இலட்சம். அதாவது உங்கள் முதலீடு 11 இலட்சம் மடங்கு கூடியிருக்கிறது. 2018 ஆம் வருடத்திற்கான பங்காதாயம் 3666 ரூபாய். 2018 ஆம் வருடத்திற்கான  பங்காதாயம் மட்டும் உங்கள் ஆரம்ப முதலீட்டைப் போல் 3666 மடங்கு. 

33 கோடி என்பது ஆகப்பெரிய தொகை என்றாலும் 1946லிருந்து நாளது தேதி வரை CAGR கணக்கிட்டால் 21 சதவீதம் தான் வருகிறது. சராசரியை நோக்கிய பின்னடைவு தன் வேலையைச் செவ்வனே செய்திருக்கிறது.

2018 ஆம் வருடத்திற்கான பங்காதாயம் ஒரு பங்கிற்கு ஒரு ரூபாய் என்ற அளவில் 11 இலட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. நிறுவனம் அடுத்த வருடம் இன்னும் ஒரு ரூபாய் கூடுதலாகக் கொடுத்தால் இது 22 இலட்சம் என்று ஆகி விடும். இது தான் கூட்டு வட்டியின் உருப்பெருக்கம். இது எல்லாம் வெறும் 300 ரூபாயிலிருந்து தொடங்கியது.

வெள்ளி விழா ஆண்டில் தான் விப்ரோ முதன்முதலாக இலவசப்பங்குகளை வழங்கத் தொடங்கியிருக்கிறது. எனவே நீண்ட கால முதலீடு என்பதைக் குறைந்தபட்சம் 25 ஆண்டுகளாக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு ஆண்டுகள் வளர்ந்த பின்னர் தான் உபரிப்பணம் சேர்ந்து நிறுவனம் இலவசப்பங்குகளைக் கொடுக்கக்கூடிய வல்லமை பெறும். அதே மாதிரி நிறுவனப்பிரிப்பை 66 வருடங்கள் கழித்து மேற்கொண்டிருக்கிறது. 5 விப்ரோ பங்குகளுக்கு ஒரு நுகர்பொருள் துறை பங்கு. 1.65 நுகர்பொருள் பங்குகளுக்கு 1 விப்ரோ பங்கு. இந்த வகையில் மட்டும் 46545 பங்குகள் கிடைத்திருக்கிறது. எனவே day trader என்றில்லாமல் decade trader என்ற அளவில் உங்கள் பார்வையை விசாலமாக்குங்கள்.

வாரன் பபெட்டின் முதலீட்டு நிறுவனமான பெர்க்சயர் ஹாத்வேயை விட வருடக்கணக்கிலும் (BRK- 53/ WIPRO- 73) வருமானக்கணக்கிலும் (BRK- 18.7 CAGR/ WIPRO- 21 CAGR) விப்ரோ ஒரு படி மேல் என்பது ஒரு உலக சாதனை.

முகம்மது பிரேம்ஜியின் காலத்தில் விப்ரோ பங்கு இவ்வளவு விஸ்வரூபம் எடுக்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒரு விதையாகத் தான் அது இருந்திருக்கிறது. 1970களில் பங்குதாரர் ஒருவர் எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டியளிக்கையில் விப்ரோவின் நூறு ரூபாய் பங்கு வெறும் 35 ரூபாய்க்கு வர்த்தகமானதாகவும் சந்தையில் விப்ரோவின் பங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகமானதையும் நினைவு கூர்கிறார். விப்ரோ பங்கை இனங்கண்டு வைத்திருப்பதில் கொஞ்சம் கர்ம பலன்களும் கலந்திருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு அறிவார்ந்த முதலீட்டாளர் விப்ரோ பங்கைத் தொடர்ந்து வைத்திருப்பதற்குத் தகுந்த காரணங்கள் என்று எதுவுமில்லை.

விப்ரோ பங்கை IPO வில் வாங்கி இவ்வளவு நாட்கள் வைத்திருப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்கும் சந்தேக சந்துருக்களுக்கு ஒரு சின்ன தகவல். Amalnerல் 2013ஆம் ஆண்டு கணக்குப்படி 3000 கோடி மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் விப்ரோவின் பங்காதாயத்தில் ஒரு வீட்டைக் கட்டி அதற்கு விப்ரோ என்று பெயரிட்டிருப்பதை இன்றும் காணலாம். பத்திரிகை நிருபர் ஒருவர் இந்தப் பங்குகளை விற்பீர்களா என்று ஒரு பங்குதாரரிடம் கேட்ட போது வருடாவருடம் பங்காதாயம் இலட்சங்களில் கிடைக்கிறது. எப்போதாவது அவசரத்தேவைக்கு பத்து இருபது பங்குகளை விற்பேன் என்பதாகக் கூறியிருக்கிறார். அது சரி, தங்க முட்டையிடும் வாத்தை யாராவது வெட்டுவார்களா என்ன?

கண் ஒரு சாதாரண உறுப்பு. பார்வையோ ஒரு மிகப்பெரிய கலை. பங்குகளை மரமாகப் பார்க்காமல்  கானகமாகப் பார்க்கும் பார்வையைக் கைக்கொள்ளுங்கள். விப்ரோவின் ஒரு பங்கு 290 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. நாம் பார்ப்பது மரத்தின் ஒரு இலையை மட்டுமே. அடர்த்தியான அமேசான் காடு உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா?

வாரன் பபெட், பில்கேட்ஸ் போன்றவர்களால் தொடங்கப்பட்ட The Giving Pledge அமைப்பில் கையெழுத்திட்ட முதல் இந்தியர் அசீம் பிரேம்ஜி. அசீம் பிரேம்ஜி அறக்கட்டளைக்கு நாளது தேதி வரை அவர் கொடுத்த தொகை ரூ.145000 கோடி. இந்தியாவின் கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல் தான்  இந்த அறக்கட்டளையின் தலையாய  பணி. அழியாத செல்வம் கல்வி என்று சொல்வார்கள். அழியக் கூடிய செல்வத்தை அழியாத செல்வமாகிய கல்விக்குக் கொடுத்திருக்கிறார்.

எல்லாம் சரி, இப்போது விப்ரோ பங்குகளை வாங்கலாமா? முதலீட்டுப் பயணத்தில் எப்போதும் பின் பக்கக் கண்ணாடி (rear view mirror) தெளிவாகத் தெரியும். முன் பக்கக் கண்ணாடி ( wind shield) ஒரே பனிமூட்டமாகத் தான் தெரியும் என்று வாரன் பபெட் ஏற்கனவே கூறியிருக்கிறார். அந்தப் பனிமூட்டத்தின் ஊடான தெரிந்தும் தெரியாத, அறிந்தும் அறியாத, புரிந்தும் புரியாத புதிரை விடுவிப்பதில் தான் பங்குச்சந்தையின் இனிமை நிரம்பியிருப்பதாகத் தோன்றுகிறது.

S. சொக்கலிங்கம்.

No comments:

Post a Comment